Saturday, March 29, 2008

விபூதி - ஒரு ஆராய்ச்சி

விபூதி என்ற பெயரிலேயே அதனுடைய மகிமை விளங்கும். "வி" என்றால் மேலானது. "பூதி" என்றால் ஐஸ்வரியம்(செல்வம்). திருநீறு என்று மற்றொரு பெயரும் இதற்கு உண்டு. திரு என்றால் தெய்வத்தன்மை. நீறு என்றால் வினைகளை நீறாக்குவது என்று பொருள். நம் வினைகளை வேரறுத்து நம்மை தெய்வ நலத்தில் இணைக்கும் சாதனமே திருநீறு ஆகும். அதனை மகிழ்ச்சியுடன் பூசி மகிழ்பவர்கள் அடையும் பேற்றினைக் கூறவந்த திருமூலதேவநாயனார்
"கங்காளன் பூசுங்கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளும் சாருங் சிவகதி சிங்காரமான திருவடி சேர்வரே"
திருநீற்றின் பெருமையை நாம் அனைவரும் உணர்ந்து உய்வு பெறும் பொருட்டு திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் "திருஆலவாய் திருநீற்றுப்பதிகம்" என்னும் அற்புதப் பாசுரத்தைத் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்கள்.
"மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கள் திருஆலவாயான் திருநீறே"
"நீறு இல்லா நெற்றி பாழ்" என்பது ஒளவை வாக்கு.
பசுவின் சாணத்தை அக்கினியினாலே தகித்தலால் உண்டாக்கியது வெண்மையான் திருநீறு. இதனை அணிபவர்கள் தங்களுடைய மும்மலங்கள் [ஆணவம், கன்மம், மாயை] ஆகியவைகளை சிவாக்கினியில் தகித்து வெண்மையான ஆன்மா ஆகும், முக்தி பேற்றைப் பெறுவார்கள்.
ஞான் அக்கினியால் தகிக்கப்பட்ட பசுமல நீக்கத்தில் விளங்கும் சிவத்துவப் பேற்றிற்கு அறிகுறி விபூதி
திருநீற்றை முக்குறியாக அணிகிறோம். ஏனென்றால் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களை வேரோடு நீக்கினால் தான் நாம் முக்திக்கு தகுதி உடையவர் ஆகிறோம் என்பதை அக்குறி உணர்த்துகிறது.

விபூதியை பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும், வில்வக் குடுக்கையிலேனும், சுரைக்குடுக்கையிலேனும் எடுத்து வைத்துக் கொண்டு தரித்தல் வேண்டும்.
விபூதியை வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.
விபூதியை நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து "சிவ சிவ" என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் தரித்தல் வேண்டும்.

வாய்ங்காந்து கொண்டும், தலை நடுங்கிக் கொண்டும், கவிழ்ந்து கொண்டுந் தரிக்கலாகாது. ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனுந் தரிக்கலாகாது.

சந்தியாகால மூன்றினும், சூரியோதயத்தினும், சூரியாஸ்தமயத்தினும், ஸ்நானஞ் செய்தவுடனும், பூசைக்கு முன்னும் பின்னும், மல சல மோசனஞ் செய்து செளசம் பண்ணி ஆசமித்த பின்னும், தீ¨க்ஷ இல்லாதவர் தீண்டிய போதும், விபூதி ஆவசியமாகத் தரித்தல் வேண்டும்.

கருநிற விபூதியும், செந்நிற விபூதியும், புகைநிற விபூதியும், பொன்னிற விபூதியுந் தரிக்கலாகாது.

விபூதி தரியாதவருடைய முகம் சுடுகாட்டுக்குச் சமமாகும்.

திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்
1. உடல் நாற்றத்தைப் போக்கும்.
2. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.
3. தீட்டுக் கழிக்கும்.
4. உடலைச் சுத்தம் செய்யும்.
5. வியாதிகளைப் போக்கும்.
6. பில்லிசூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்.
7. முகத்திற்கு அழகைத் தரும்.
8. ஞாபக் சக்தியை உண்டாக்கும்.
9. புத்திக் கூர்மையைத் தரும்.
10. ஞானத்தை உண்டாக்கும்.
11. பாவத்தைப் போக்கும்.
12. பரக்தியைத் தரும்.

"மால் அயன் இந்திரன் மற்றைய அமரர் மலர் மகளிர் சசி மற்றை வானக் கோல மடவார் இயக்கர் கந்தருவர் இராக்கர் குல அரசர் வேதச் சீல் முனிவரர் மற்றோர் இவருளரும் தவமுடையீர் திருவெண்ணீறு சாலவும் உத்தூளனம் முப்புண்டாம் நாள்தோறும் போற்றித் தரியார் யாரே"

"பத்தியொடு சிவ சிவ என்று திருநீற்றைப் பரிந்து கையால் எடுத்து பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு பருத்தபுயமீது விழ நித்தமும் விரல்களால் நெற்றியில் அழுந்தலுற நினைவாய்த் தரிப்பவர்க்கு நடுவினை அணுகாது, தேகம் பரிசுத்தமாம், நீங்காமல் நிமலன் அங்கே அத்தியோடு நித்தம் விளையாடுவான், முகத்திலே தாண்டவக் செய்யும் திரு சஞ்சலம் வராது, பரகதி உதவும், இவனையே சக்தியும் சிவனும் எனலாம் மத்தினிய மேரு என வைத்து அழுதினைக்கடையும் மால்மருகனான முருகா மயிலேறி விளையாடும் குகனே பொன்வயல் நீடு மலைமேவு குமரேசனே"

அணைத்து லோகத்திலும் அங்குள்ள தெய்வங்களும், தேவர்களும், அடியார்களும் திருநீறு அணிகிறார்கள்.

"கண்ணன் வெண்பூதி பூசிக் கண்டிகை மாலை சாத்திப் புண்ணியத் திங்கள் வேணி யானிருபாதம் போற்றி"
எனக் கண்ண அவதாரத்திலும் கண்டிகையும் நீறும் அணிந்தனர் - என்று கூறியிருப்பதையும் வாயு சங்கிதையில் உத்திர காண்டத்திலும்,

மகாபாரதத்தில் அநுசாசன் பர்வத்தில் 14-ஆம் அத்தியாயத்திலும் கூர்ம புராணத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் உபமன்யு மகாமுனிவரிடம் சிவதீட்சை பெற்று சிவபூஜை செய்து, தான் விரும்பிய பலனைப் பெற்றார் என்று கூறியிருப்பதை நாம் உற்று நோக்க வேண்டும். எனவே ஸ்ரீ மன் நாராயணன் சிவஸ்துதி செய்பவனாகவும், சிவ சின்னமான விபூதியை மூன்று பட்டைக் கோடுகளாக நெற்றியில் தரித்தவராகவும், ருத்திரனுடைய கண்ணிற்குச் சமமானதாகவுள்ள ருத்திராக்ஷ மணிமாலையை அணிந்தவராகவும் இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

விபூதிக்கு பஸிதம், பஸ்மம், க்ஷ¡ரம், இர¨க்ஷ என்ற பெயர்களும் உண்டு. எல்லாப் பாவங்களையும் போக்குதலால் பஸ்மம் எனவும், பிரகாசித்தலால் பசிதம் எனவும். ஆபத்தைப் போக்கலால் க்ஷ¡ரம் எனவும், பூதப்பிரேத பிசாச பிரம ராக்ஷஸ அபஸ்மார பவ பீதிகளின்றும் காத்தலால் இர¨க்ஷ எனவும் திருநாமங்கள் வந்தன.

இவ்வளவு மேன்மை பொருந்திய விபூதி யணிவதிலும் மேலான சிவபுண்ணியம் யாதுளது?

Thursday, February 21, 2008

இப்ப கிளைமேக்ஸ்...

இவ்வளவு நேரம் படிச்சதுலயே என் புத்திசாலித்தனம் உங்களுக்கு புரிஞ்சுருக்குமே. அதுனால‌ நேரா மேட்ட‌ர் சொல்லிட‌றேன். டிக்கெட்ல‌ தேதி எல்லாம் க‌ரெக்ட்தான் வெள்ளிக்கிழ‌மை தேதிதான். ஆனா நேர‌ம் போட்டிருந்த‌தே அதுல‌தாங்க‌ மேட்ட‌ர் இருந்துருக்கு. 12.20னு போட்டிருந்துச்சே அது காலையில 12.20 ஆம். அப்ப‌டின்னா என்ன‌னுதானே கேக்க‌றீங்க‌. அது வெள்ளிக்கிழ‌மை காலையில. நான் ச‌னிக்கிழ‌மை காலையில‌ ஸ்டேஷ‌ன்ல‌ நின்னுட்டிருக்கேன்.


அவ்ளோதாங்க‌.. இதுக்கு மேல‌யும் அந்த‌ ஸ்டேஷ‌ன்ல‌ என் சோக‌ம் தொட‌ர்ந்துச்சு 1.30 ம‌ணி வ‌ரைக்கும். அத‌ அப்புற‌மா சொல்றேன். இப்போதைக்கு இது போதும்...

Wednesday, February 20, 2008

தொடரும் பயணம்...

அந்த போலீஸ்காரரு நான் என்னமோ அந்த இன்டர்நேஷனல் ரயில்வே ஸ்டேஷன்க்கு பாம் வைக்கற மாதிரி என்னை கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாரு. எனக்கு ஒழுங்கா ஜண்டு பாம்கூட தடவத்தெரியாது என்னை பாத்து.. இப்படி ஒரு சோதனை.. என்ன பண்றது இந்த உலகம் நல்லவங்க யாரைத்தான் நம்பி இருக்கு (சரி சரி பக்கத்துல இருக்கற யாரையும் அடிக்கக்கூடாது. என்னை நானே நல்லவனு சொல்லிக்காட்டி வேற யாரு சொல்லப்போறா).


அவரு பக்கத்துல வந்து டிக்கெட் காட்டச்சொன்னாரு. (என்னங்க அநியாயம் இது. பால் வடியற என் முகத்தை பார்த்ததுக்கப்புறமும் எப்படிதான் இப்படியெல்லாம் யோசிக்கத்தோணுது.) சரின்னு டிக்கெட் எடுத்துக் காட்டினேன். பாத்துட்டு சரின்னு போயிட்டாரு. (யாருகிட்ட இதெல்லாம்...) 12.16


போயிட்டாருன்னுதாங்க உங்களை மாதிரி நானும் நம்பினேன் அப்பாவியா.



அவரு ஸ்லோமோஷன்ல நடந்து போயி ஸ்டேஷன் மாஸ்டரிகிட்ட‌ (ஆமாங்க அங்க இருந்தது ஒரு பெண் மாஸ்டர் அப்ப அவங்க மாஸ்டரிதானே) ஏதோ சொல்லிட்டிருந்தாரு. சரி அவங்களுக்குள்ள 1009 கூட இருக்கும். நமக்கு எதுக்குங்க அதெல்லாம். 12.18


எப்பவும் போல வேடிக்கை பாத்துட்டு இருந்தேன் தண்டவாளத்தை. ஆமாங்க ஸ்டேஷன்ல ஒருத்தருமே இல்லைன்னா வேற எதை பாக்க முடியும் தண்டவாளத்தை தவிர. 12.19


திரும்பி பாத்தா அந்த இன்ஸ்பெக்டர், மாஸ்டரியோட சேர்ந்து என்னை பாத்து நடந்து வந்திட்டுருந்தாரு. அவங்க கூட இன்னும் ஒரு நாலு பேரு வந்திட்டிருந்தாங்க. என்னங்க ஒரு வருங்கால பிரபலத்தை தனியா நிக்ககூட விட மாட்டேன்றாங்க. எத்தனை ஆட்டோகிராப்தான் போடமுடியும் ஒரு நாளைக்கு. முடியலைங்க. (இது உங்க முடியலைங்க இல்லை என் முடியலைங்க)12.20


டிரெயின் வரதுக்கான அனௌன்ஸ்மென்ட்ட சொல்லாம எல்லாரும் என்கிட்ட வந்துட்டிருக்காங்க சே கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை இந்த ஜனங்களுக்கு.



எல்லாரும் என்கிட்ட வந்து என்னை சுத்தி நின்னாங்க. திடீர்னு பாத்தா அந்த மாஸ்டரி என் டிக்கெட் காட்டச்சொன்னாங்க. அப்ப ஆட்டோகிராப் மேட்டர் இல்லையா இது. சரின்னு அந்த டிக்கெட் எடுத்துக் காட்டினேன். அதென்ன ஷ்ரேயாவோட போட்டோவா இப்படி பாக்கறாங்க.. இப்ப டிரெயின் வருமா வராதானு சொல்ல ஒரு ஆள் இல்லை இப்படி கூட்டம் கூடறதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை. இப்படியெல்லாம் ஒரு குரல் உள்ளே ஓடிட்டே இருந்துச்சு.. 12.25pm

சரிங்கய்யா... நல்லா பாருங்க... பார்த்துட்டு அந்த டிரெயின் எப்ப வரும்னு சொல்லுங்கய்யா சாமிகளான்னு கேட்டா எல்லார்கிட்ட இருந்தும் ஒரே மாதிரி ரியாக்ட் பண்றாங்க... ஸ்லோமோஷன்ல நிமிந்து பாத்தாங்க ஒரே சமயத்துல... என்னதான்யா நடக்குது...

ஒரு வழியா அந்த டிக்கெட்ல இருந்து ஏதோ ஆராய்ச்சி எல்லாம் முடிஞ்சு ரிசல்ட் அனௌன்ஸ் பண்ணாங்க..அய்யஹோ... என்ன கொடுமை சார் இது.. நாட்ல இப்படி எல்லாம் கூட நடக்குமா..ஏங்க எனக்கு மட்டும் இப்டி எல்லாம்.. ஏன் ஏன் ஏன்...இப்படி என்னை சுத்தியும் ஒரே கேள்விகளா சுத்துது...

அது என்னன்னு கேக்கறீங்களா... பின்ன இவ்வளவு பில்ட் அப் குடுத்துட்டு அதென்ன சொல்லித்தொலைன்னுதானே சொல்றீங்க... ம்ம்ம்ம் நீங்க இப்படி எல்லாம் கேட்டா நான் சொல்ல மாட்டேன். எனக்கு ஒரே அழுவாச்சியா வருது. அதுனால அந்த கிளைமாக்ஸ் மட்டும் அடுத்த பதிவுல சொல்றேன்...

Sunday, February 17, 2008

என் முதல் பயணம்

என்னத்தை சொல்றது.. ஒரு வழியா நான் பண்ண சேவையெல்லாம் போதும்னு சென்னை மக்கள் என்னை பெங்களூருக்கு அனுப்பி வச்சாங்க போன ஜூலையில். அட அடா மக்கள் என்மேல எவ்வளவு பாசக்கார பயலுகளா இருக்காங்கன்னு அன்னைக்குதான் புரிஞ்சது. டிரெயினக்கூட தள்ளிவிடறாங்க கிளம்ப கொஞ்சம் லேட் ஆனவுடனே. சரின்னு வராத அழுவாச்சிய தொடச்சிக்கிட்டு கிளம்பிட்டேன்.

ஆபீஸ் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சி. ஒரு ரூம் பாத்து செட்டில் ஆயாச்சு. சரி ஊருக்கு போறதுக்காக‌ முதல் வாரம் ரயிலில் டிக்கெட் ரிசர்வ் செய்துவிட்டேன். சென்னையில் இருந்து ஒரு நாள் கூட டிரெயின்ல போனதில்லை நமக்கு எப்பவும் பஸ்தான். கரெக்ட் டைம்க்கு ஊருக்கு கொண்டுபோய் விட்ருவாரு எங்க ஊரு பஸ் டிரைவரண்ண அவரு ரொம்ப நல்லவருங்க. காலையில 7.30க்கு கொண்டு போய் விடுவாரு. நாம எந்திரிக்கறதுக்கு சரியா இருக்கும். இந்த ஊர்ல இருந்து போற டிரெயின் எதுல பாத்தாலும் எல்லாம் பாதி ராத்திரி 4 மணிக்கு கொண்டு போகுது. இது சரியா வராதுன்னு லேட்டா கிளம்பற டிரெயின்‍ல ரிசர்வ் பண்ணலாம்னு பாத்தேன். அதிர்ஷ்ட வசமா ஒரே ஒரு டிரெயின் மட்டும் ராத்திரி 12.20க்கு கிளம்புச்சி காலையில 8மணிக்கு போகுமுனு போட்டிருந்துச்சு). சூப்பர்‍னு துள்ளி குதிச்சி (நோ நோ அப்டியெல்லாம் யோசிக்கக்கூடாது) உடனே புக் பண்ணிட்டேன். அதுவும் முதல் முறையா தேர்ட் ஏ.சி. வேற (முக்கியமா சொந்த காசில). பயங்கர கற்பனை.

ஆபீஸ்ல‌ இருந்து சாய‌ந்திர‌மே கிள‌ம்பிட்டேன் ஊரு புதுசுனு சொல்லி. கூட‌ வேலை செய்ய‌ற‌ ஒருத்த‌ர் டிராப் ப‌ண்ணாரு க‌ன்டோன்மென்ட் ஸ்டேஷ‌ன்ல‌. அப்ப‌வும் அவ‌ரு கேட்டாரு ஏன் அனு இங்கே போறீங்க‌. மெஜ‌ஸ்டிக் போலாம்லன்னு. நாம‌ எப்ப‌வும் போல‌ ப‌ந்தாவா ப‌ர‌வால்ல‌ங்க‌ இதான் என‌க்கு ச‌ரியா இருக்கும்னு சொல்லிட்டு இற‌ங்கிட்டேன். நாம‌தான் எல்லாம் தெரிஞ்ச‌ ஏகாம்ப‌ரி (ஏகாம்ப‌ர‌னுக்கு பெண்பால் ச‌ரிதானுங்க‌ளே) ஆச்சே.

12.20 டிரெயினுக்கு 9ம‌ணிக்கே ஸ்டேஷ‌ன் போயாச்சு. குமுத‌ம், ஆனந்த‌ விக‌ட‌ன்னு கைல‌ கிடைச்ச‌ புக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வேடிக்கை பாக்க‌ ஆர‌ம்பிச்சேன். ஒவ்வொரு டிரெயினா பாத்துட்டே இருந்தேன். ம‌ணி 10.30 ஆய்டுச்சு. வெயிட்டிங் ரூம்ல‌ உக்காந்துட்டு இருந்தேன். அங்க‌ வேலை செய்ய‌ற‌ ஒருத்த‌ர் வ‌ந்து கேட்டாரு எந்த‌ டிரெயினும்மானு. ம‌றுப‌டியும் ப‌ந்தாவா அந்த டிரெயின் பேரை சொன்னேன். அவ‌ரு வித்தியாச‌மா பாத்தாரு. ச‌த்திய‌மான்னு ஏன்னு புரிய‌லை. என‌க்கு ம‌ட்டும்தான் அந்த‌ டிரெயின் தெரியும்னு நின‌ச்சிட்டு உக்காந்துட்டு இருந்தேன். 11 .15 ஆச்சு.

எவ்வ‌ள‌வு நேர‌ம்தான் அங்கேயே இருக்க‌ற‌துனு கிள‌ம்பி அடுத்த‌ ப்ளாட்பார்ம்னு வ‌ந்து உக்காந்துட்டேன். ப‌க்க‌த்துல ஒருத்த‌ர் நான் என்ன‌ ப‌டிச்சிருக்கேன், எங்கே வேலை பாக்க‌றேன், என்ன‌ ச‌ம்ப‌ள‌ம் வாங்கறேன் என்ன‌வோ அவ‌ர் பைய‌னுக்கு பொண்ணு பாக்க‌ற‌ மாதிரி கேள்வி கேட்டுட்டு இருந்தாரு. முடிஞ்ச‌வ‌ரைக்கும் நானும் ப‌தில் சொல்லிட்டு இருந்தேன். ம‌ணி 12.

ச‌ரி இன்னும் 20 நிமிஷ‌ம்தானேன்னு உக்காந்திருந்தேன். ஆனா பாருங்க‌ ந‌ம்ம‌ ஊர்ல‌ யாருமே அந்த‌ டிரெய்ன் தெரிய‌ல‌ போல‌ இருக்கு. திடீர்னு ஒரு போலீஸ்கார‌ரு எதுக்கு இங்கே இருக்கேன்னு கேள்வி கேட்டாரு. லூஸுனு ம‌ன‌சுல‌ நினைச்சுக்கிட்டு ம‌றுப‌டியும் இந்த‌ டிரெயின் க‌தையை ம‌றுப‌டியும் சொன்னேன். அவ‌ர் அப்ப‌டி ஒரு டிரெயினே இல்லைன்னாரு. இவ‌ருக்கு தெரிய‌லேன்னா அப்ப‌டி டிரெயினே இல்ல‌ன்னு ஆய்டுமா என்ன‌. டிக்கெட் எல்லாம் ரிச‌ர்வ் ப‌ண்ணிட்டு உக்காந்துட்டு இருக்கேன் நான் என்ன‌ லூஸா. சொல்லுங்க‌....மணி 12.15

மீதிய அடுத்த போஸ்ட்ல எழுதிப்போடலாம் என்ன நான் சொல்றது....

Friday, February 8, 2008

முதல் பதிவு

சும்மா ஜாலியா எதாவது எழுதலாம்னு முயற்சி பண்றேன். எப்பவும் போல சொதப்பினாலும் விடறாதா இல்லை. எனக்காச்சு உனக்காச்சு பாத்துடலாம்...

இப்படி எழுதலாம்னு ஒரு பதிவு ஒண்ணு தொடங்கினேன். யார் செஞ்ச புண்ணியமோ அதோட password மறந்து போச்சு. சரின்னு விட்டுட்டேன். ஆனா பாருங்க வெள்ளிக்கிழமையும் அதுவுமா சாயந்திரம் 6.45 மணிக்கு அப்புறமும் Office-ல இருக்கறாப்ல ஆகிப்போச்சு. உள்ள இருந்து ஒரு குரல். எப்படியும் வேலை செய்யப்போறதில்லை. அட எழுதவாவது செய்யலாம்லனு அதான் தொடங்கிட்டேன்.

இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் என்னை யாரும் வேலை செய்ய சொல்லாதீங்கப்பு...

நானா சண்டைக்கு போக மாட்டேன். என்னை இப்ப வீட்டுக்கு விடல அப்புறம் வந்த சண்டையை விட மாட்டேன். அக்காங்...