Saturday, March 29, 2008

விபூதி - ஒரு ஆராய்ச்சி

விபூதி என்ற பெயரிலேயே அதனுடைய மகிமை விளங்கும். "வி" என்றால் மேலானது. "பூதி" என்றால் ஐஸ்வரியம்(செல்வம்). திருநீறு என்று மற்றொரு பெயரும் இதற்கு உண்டு. திரு என்றால் தெய்வத்தன்மை. நீறு என்றால் வினைகளை நீறாக்குவது என்று பொருள். நம் வினைகளை வேரறுத்து நம்மை தெய்வ நலத்தில் இணைக்கும் சாதனமே திருநீறு ஆகும். அதனை மகிழ்ச்சியுடன் பூசி மகிழ்பவர்கள் அடையும் பேற்றினைக் கூறவந்த திருமூலதேவநாயனார்
"கங்காளன் பூசுங்கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளும் சாருங் சிவகதி சிங்காரமான திருவடி சேர்வரே"
திருநீற்றின் பெருமையை நாம் அனைவரும் உணர்ந்து உய்வு பெறும் பொருட்டு திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் "திருஆலவாய் திருநீற்றுப்பதிகம்" என்னும் அற்புதப் பாசுரத்தைத் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்கள்.
"மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கள் திருஆலவாயான் திருநீறே"
"நீறு இல்லா நெற்றி பாழ்" என்பது ஒளவை வாக்கு.
பசுவின் சாணத்தை அக்கினியினாலே தகித்தலால் உண்டாக்கியது வெண்மையான் திருநீறு. இதனை அணிபவர்கள் தங்களுடைய மும்மலங்கள் [ஆணவம், கன்மம், மாயை] ஆகியவைகளை சிவாக்கினியில் தகித்து வெண்மையான ஆன்மா ஆகும், முக்தி பேற்றைப் பெறுவார்கள்.
ஞான் அக்கினியால் தகிக்கப்பட்ட பசுமல நீக்கத்தில் விளங்கும் சிவத்துவப் பேற்றிற்கு அறிகுறி விபூதி
திருநீற்றை முக்குறியாக அணிகிறோம். ஏனென்றால் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களை வேரோடு நீக்கினால் தான் நாம் முக்திக்கு தகுதி உடையவர் ஆகிறோம் என்பதை அக்குறி உணர்த்துகிறது.

விபூதியை பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும், வில்வக் குடுக்கையிலேனும், சுரைக்குடுக்கையிலேனும் எடுத்து வைத்துக் கொண்டு தரித்தல் வேண்டும்.
விபூதியை வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.
விபூதியை நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து "சிவ சிவ" என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் தரித்தல் வேண்டும்.

வாய்ங்காந்து கொண்டும், தலை நடுங்கிக் கொண்டும், கவிழ்ந்து கொண்டுந் தரிக்கலாகாது. ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனுந் தரிக்கலாகாது.

சந்தியாகால மூன்றினும், சூரியோதயத்தினும், சூரியாஸ்தமயத்தினும், ஸ்நானஞ் செய்தவுடனும், பூசைக்கு முன்னும் பின்னும், மல சல மோசனஞ் செய்து செளசம் பண்ணி ஆசமித்த பின்னும், தீ¨க்ஷ இல்லாதவர் தீண்டிய போதும், விபூதி ஆவசியமாகத் தரித்தல் வேண்டும்.

கருநிற விபூதியும், செந்நிற விபூதியும், புகைநிற விபூதியும், பொன்னிற விபூதியுந் தரிக்கலாகாது.

விபூதி தரியாதவருடைய முகம் சுடுகாட்டுக்குச் சமமாகும்.

திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்
1. உடல் நாற்றத்தைப் போக்கும்.
2. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.
3. தீட்டுக் கழிக்கும்.
4. உடலைச் சுத்தம் செய்யும்.
5. வியாதிகளைப் போக்கும்.
6. பில்லிசூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்.
7. முகத்திற்கு அழகைத் தரும்.
8. ஞாபக் சக்தியை உண்டாக்கும்.
9. புத்திக் கூர்மையைத் தரும்.
10. ஞானத்தை உண்டாக்கும்.
11. பாவத்தைப் போக்கும்.
12. பரக்தியைத் தரும்.

"மால் அயன் இந்திரன் மற்றைய அமரர் மலர் மகளிர் சசி மற்றை வானக் கோல மடவார் இயக்கர் கந்தருவர் இராக்கர் குல அரசர் வேதச் சீல் முனிவரர் மற்றோர் இவருளரும் தவமுடையீர் திருவெண்ணீறு சாலவும் உத்தூளனம் முப்புண்டாம் நாள்தோறும் போற்றித் தரியார் யாரே"

"பத்தியொடு சிவ சிவ என்று திருநீற்றைப் பரிந்து கையால் எடுத்து பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு பருத்தபுயமீது விழ நித்தமும் விரல்களால் நெற்றியில் அழுந்தலுற நினைவாய்த் தரிப்பவர்க்கு நடுவினை அணுகாது, தேகம் பரிசுத்தமாம், நீங்காமல் நிமலன் அங்கே அத்தியோடு நித்தம் விளையாடுவான், முகத்திலே தாண்டவக் செய்யும் திரு சஞ்சலம் வராது, பரகதி உதவும், இவனையே சக்தியும் சிவனும் எனலாம் மத்தினிய மேரு என வைத்து அழுதினைக்கடையும் மால்மருகனான முருகா மயிலேறி விளையாடும் குகனே பொன்வயல் நீடு மலைமேவு குமரேசனே"

அணைத்து லோகத்திலும் அங்குள்ள தெய்வங்களும், தேவர்களும், அடியார்களும் திருநீறு அணிகிறார்கள்.

"கண்ணன் வெண்பூதி பூசிக் கண்டிகை மாலை சாத்திப் புண்ணியத் திங்கள் வேணி யானிருபாதம் போற்றி"
எனக் கண்ண அவதாரத்திலும் கண்டிகையும் நீறும் அணிந்தனர் - என்று கூறியிருப்பதையும் வாயு சங்கிதையில் உத்திர காண்டத்திலும்,

மகாபாரதத்தில் அநுசாசன் பர்வத்தில் 14-ஆம் அத்தியாயத்திலும் கூர்ம புராணத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் உபமன்யு மகாமுனிவரிடம் சிவதீட்சை பெற்று சிவபூஜை செய்து, தான் விரும்பிய பலனைப் பெற்றார் என்று கூறியிருப்பதை நாம் உற்று நோக்க வேண்டும். எனவே ஸ்ரீ மன் நாராயணன் சிவஸ்துதி செய்பவனாகவும், சிவ சின்னமான விபூதியை மூன்று பட்டைக் கோடுகளாக நெற்றியில் தரித்தவராகவும், ருத்திரனுடைய கண்ணிற்குச் சமமானதாகவுள்ள ருத்திராக்ஷ மணிமாலையை அணிந்தவராகவும் இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

விபூதிக்கு பஸிதம், பஸ்மம், க்ஷ¡ரம், இர¨க்ஷ என்ற பெயர்களும் உண்டு. எல்லாப் பாவங்களையும் போக்குதலால் பஸ்மம் எனவும், பிரகாசித்தலால் பசிதம் எனவும். ஆபத்தைப் போக்கலால் க்ஷ¡ரம் எனவும், பூதப்பிரேத பிசாச பிரம ராக்ஷஸ அபஸ்மார பவ பீதிகளின்றும் காத்தலால் இர¨க்ஷ எனவும் திருநாமங்கள் வந்தன.

இவ்வளவு மேன்மை பொருந்திய விபூதி யணிவதிலும் மேலான சிவபுண்ணியம் யாதுளது?