Tuesday, January 1, 2008

ஒரு பேருந்து பயணமும், நட்பும்

சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் பாண்டிச்சேரி அருகில் உள்ள ஒரு சிறிய முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு பேருந்தில் திண்டிவனத்திலிருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தோம். இறுதி இருக்கைக்கு இரு இருக்கைகள் முன்னால் அமர்ந்திருந்தோம். பேருந்தில் கூட்டம் அதிகமாக இல்லை.

பின் இருக்கையில் 17, 18 வயது மதிக்கக்கூடிய ஒருவர் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தார். சிறிது நேரம் கழித்து பின் இருக்கையில் இருந்து பாடல் சத்தம் கேட்டது. குரல் இனிமையாகவும் ரசிக்கும் படியாகவும் இருந்தது.

எந்த ஒன்றை ரசித்தாலும் அதை உடனே பாராட்டியாக வேண்டிய ஆர்வம் கொஞ்சம் கோளாறாகவே என்னிடம் உள்ளது. நண்பரிடம் சொன்னேன். அவர் ஏதும் தவறாக எடுத்துக்கொள்ளப் போகிறார். அவரது தனிமையில் உன்னை இடையூறாக நினைக்கப் போகிறார் என்றார். இருந்தாலும் எப்போதும் போலவே என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை.

திரும்பி சொன்னேன் அவர் நன்றாக பாடுவதாக. ஒரு சின்ன புன்னகை மற்றும் வெட்கத்துடன் "நிஜமாகவா?" என்றார். சில பாடல்களை குறிப்பிட்டு அவற்றை பாட முடியுமா எனக் கேட்டேன். பாடிக் காட்டினார். இயல்பான உரையாடல் தொடங்கியது. என் பெயர், தொழில் தொடர்பான கேள்விகள். அவரது பெயர் கேட்டபோது "நர்மதா" என்றார். பின் என் நண்பரைப் பற்றிய அறிமுகம், எங்களது நட்பு தொடர்பான அவருக்கு இருந்த கேள்விகள் போன்றவற்றிற்கு பதில் சொல்லிக் கொண்டு வந்தேன்.

திடீரென அவரிடமிருந்து ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. "நான் யாரென்று தெரியுமா?" என. தெரியாதென தலை அசைத்தேன். தன்னை ஒரு அரவாணி என அறிமுகப் படுத்திக் கொண்டார். "சரி" என சொல்லிவிட்டு எங்களது உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தோம்.

பிறகு தன் குடும்பம், தற்போதைய குடும்பம், படிப்பு, வாழ்க்கை முறை பற்றி சொல்லிக் கொண்டு இருந்தார். தன் தற்போதைய அம்மாவுக்கு பேச வேண்டும் என எனது மொபைலைக் கேட்டார். குடுத்தேன். அவரது அம்மா இது யாருடைய போன் என்று கேட்டபோது "எனக்கு ஒரு புது friend கிடைச்சிருக்காங்க அவங்களோடதுதான்" என்ற போது நிஜமாகவே அந்த நட்பு எனக்கு பிடித்துப் போனது.

தான் இறங்க வேண்டிய இடம் வந்தால் சொல்லச் சொன்னார். சொன்னேன். பேருந்திலிருந்து அவர் இறங்கும் வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

இறங்கிய பின் குனிந்து அவர் என்னைத் தேடிய போது ஒரு இளம் நட்பின் தேடல் மனதில் நின்றது. நானும் அவரையேதான் பார்த்துக் கொண்டு உள்ளேன் என்பது தெரிந்து அவர் கையசைத்த போது என்னின் சந்தோசம், என் கையசைவு அவருள் குடுத்த மகிழ்ச்சி அவர் கண்களில் தெரிந்தது இன்று வரை எனைப் பின் தொடர்கிறது...