Sunday, February 17, 2008

என் முதல் பயணம்

என்னத்தை சொல்றது.. ஒரு வழியா நான் பண்ண சேவையெல்லாம் போதும்னு சென்னை மக்கள் என்னை பெங்களூருக்கு அனுப்பி வச்சாங்க போன ஜூலையில். அட அடா மக்கள் என்மேல எவ்வளவு பாசக்கார பயலுகளா இருக்காங்கன்னு அன்னைக்குதான் புரிஞ்சது. டிரெயினக்கூட தள்ளிவிடறாங்க கிளம்ப கொஞ்சம் லேட் ஆனவுடனே. சரின்னு வராத அழுவாச்சிய தொடச்சிக்கிட்டு கிளம்பிட்டேன்.

ஆபீஸ் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சி. ஒரு ரூம் பாத்து செட்டில் ஆயாச்சு. சரி ஊருக்கு போறதுக்காக‌ முதல் வாரம் ரயிலில் டிக்கெட் ரிசர்வ் செய்துவிட்டேன். சென்னையில் இருந்து ஒரு நாள் கூட டிரெயின்ல போனதில்லை நமக்கு எப்பவும் பஸ்தான். கரெக்ட் டைம்க்கு ஊருக்கு கொண்டுபோய் விட்ருவாரு எங்க ஊரு பஸ் டிரைவரண்ண அவரு ரொம்ப நல்லவருங்க. காலையில 7.30க்கு கொண்டு போய் விடுவாரு. நாம எந்திரிக்கறதுக்கு சரியா இருக்கும். இந்த ஊர்ல இருந்து போற டிரெயின் எதுல பாத்தாலும் எல்லாம் பாதி ராத்திரி 4 மணிக்கு கொண்டு போகுது. இது சரியா வராதுன்னு லேட்டா கிளம்பற டிரெயின்‍ல ரிசர்வ் பண்ணலாம்னு பாத்தேன். அதிர்ஷ்ட வசமா ஒரே ஒரு டிரெயின் மட்டும் ராத்திரி 12.20க்கு கிளம்புச்சி காலையில 8மணிக்கு போகுமுனு போட்டிருந்துச்சு). சூப்பர்‍னு துள்ளி குதிச்சி (நோ நோ அப்டியெல்லாம் யோசிக்கக்கூடாது) உடனே புக் பண்ணிட்டேன். அதுவும் முதல் முறையா தேர்ட் ஏ.சி. வேற (முக்கியமா சொந்த காசில). பயங்கர கற்பனை.

ஆபீஸ்ல‌ இருந்து சாய‌ந்திர‌மே கிள‌ம்பிட்டேன் ஊரு புதுசுனு சொல்லி. கூட‌ வேலை செய்ய‌ற‌ ஒருத்த‌ர் டிராப் ப‌ண்ணாரு க‌ன்டோன்மென்ட் ஸ்டேஷ‌ன்ல‌. அப்ப‌வும் அவ‌ரு கேட்டாரு ஏன் அனு இங்கே போறீங்க‌. மெஜ‌ஸ்டிக் போலாம்லன்னு. நாம‌ எப்ப‌வும் போல‌ ப‌ந்தாவா ப‌ர‌வால்ல‌ங்க‌ இதான் என‌க்கு ச‌ரியா இருக்கும்னு சொல்லிட்டு இற‌ங்கிட்டேன். நாம‌தான் எல்லாம் தெரிஞ்ச‌ ஏகாம்ப‌ரி (ஏகாம்ப‌ர‌னுக்கு பெண்பால் ச‌ரிதானுங்க‌ளே) ஆச்சே.

12.20 டிரெயினுக்கு 9ம‌ணிக்கே ஸ்டேஷ‌ன் போயாச்சு. குமுத‌ம், ஆனந்த‌ விக‌ட‌ன்னு கைல‌ கிடைச்ச‌ புக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வேடிக்கை பாக்க‌ ஆர‌ம்பிச்சேன். ஒவ்வொரு டிரெயினா பாத்துட்டே இருந்தேன். ம‌ணி 10.30 ஆய்டுச்சு. வெயிட்டிங் ரூம்ல‌ உக்காந்துட்டு இருந்தேன். அங்க‌ வேலை செய்ய‌ற‌ ஒருத்த‌ர் வ‌ந்து கேட்டாரு எந்த‌ டிரெயினும்மானு. ம‌றுப‌டியும் ப‌ந்தாவா அந்த டிரெயின் பேரை சொன்னேன். அவ‌ரு வித்தியாச‌மா பாத்தாரு. ச‌த்திய‌மான்னு ஏன்னு புரிய‌லை. என‌க்கு ம‌ட்டும்தான் அந்த‌ டிரெயின் தெரியும்னு நின‌ச்சிட்டு உக்காந்துட்டு இருந்தேன். 11 .15 ஆச்சு.

எவ்வ‌ள‌வு நேர‌ம்தான் அங்கேயே இருக்க‌ற‌துனு கிள‌ம்பி அடுத்த‌ ப்ளாட்பார்ம்னு வ‌ந்து உக்காந்துட்டேன். ப‌க்க‌த்துல ஒருத்த‌ர் நான் என்ன‌ ப‌டிச்சிருக்கேன், எங்கே வேலை பாக்க‌றேன், என்ன‌ ச‌ம்ப‌ள‌ம் வாங்கறேன் என்ன‌வோ அவ‌ர் பைய‌னுக்கு பொண்ணு பாக்க‌ற‌ மாதிரி கேள்வி கேட்டுட்டு இருந்தாரு. முடிஞ்ச‌வ‌ரைக்கும் நானும் ப‌தில் சொல்லிட்டு இருந்தேன். ம‌ணி 12.

ச‌ரி இன்னும் 20 நிமிஷ‌ம்தானேன்னு உக்காந்திருந்தேன். ஆனா பாருங்க‌ ந‌ம்ம‌ ஊர்ல‌ யாருமே அந்த‌ டிரெய்ன் தெரிய‌ல‌ போல‌ இருக்கு. திடீர்னு ஒரு போலீஸ்கார‌ரு எதுக்கு இங்கே இருக்கேன்னு கேள்வி கேட்டாரு. லூஸுனு ம‌ன‌சுல‌ நினைச்சுக்கிட்டு ம‌றுப‌டியும் இந்த‌ டிரெயின் க‌தையை ம‌றுப‌டியும் சொன்னேன். அவ‌ர் அப்ப‌டி ஒரு டிரெயினே இல்லைன்னாரு. இவ‌ருக்கு தெரிய‌லேன்னா அப்ப‌டி டிரெயினே இல்ல‌ன்னு ஆய்டுமா என்ன‌. டிக்கெட் எல்லாம் ரிச‌ர்வ் ப‌ண்ணிட்டு உக்காந்துட்டு இருக்கேன் நான் என்ன‌ லூஸா. சொல்லுங்க‌....மணி 12.15

மீதிய அடுத்த போஸ்ட்ல எழுதிப்போடலாம் என்ன நான் சொல்றது....

No comments: