Wednesday, December 26, 2007

என் பிரம்மன்

இது படைப்புக் கடவுள் பிரம்மனுக்கான படைப்பு இல்லை. அவரைப் பற்றி எழுதும் அளவு நான் அவரை அருகில் பார்த்ததும் இல்லை உணர்ந்ததும் இல்லை. ஆகையால் நான் பார்த்த உணர்ந்த என் பிறப்பின் ஆதாரத்தைப் பற்றி என்னின் உணர்வுகளை பதியும் நோக்கம் மட்டுமே இந்த பதிவு.

படிப்பறிவு குறைவான, அதிகமான குடியுடன், சண்டியர்தனமும் கொண்ட ஒருவரின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த ஒருவர் எப்படி இருக்க முடியும்.
எப்படி கற்பனை செய்தாலும் அப்படி இல்லாத ஒருவர்தான் நான் பதியப்போகும் என் முதல் மனிதன்.

எந்த வித பின்புலமும் பின் பலமும் இல்லாமல் தனியாக ஒருவனாக போராடுவதின் மகத்துவம் உணர்த்தியவர். தன் தந்தையின் பழைய, கிழிந்த கால்சட்டையை மேலும் கிழித்து டிராயராக மாற்றி அணிந்து பள்ளிக்கு சென்று படித்து பள்ளியில் முதலாவதாக தேறினாலும் தன் வறுமையை இது நாள் வரை விமர்சனம் செய்யாமல் வாழ்ந்து வருவது என்னின் ஒவ்வொரு நிமிட ஆச்சரியம்.

வாழ்க்கையின் மேல் எந்த வித அளவுக்கு அதிகமான பிடிப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை என்ற தன்னுணர்வு வர அவர் எடுத்துக்கொண்ட எனக்கு தெரிந்து அவர் எந்த முயற்சியும் எடுத்ததில்லை. நான் இன்று படிக்கும் ஓஷோ-வும் மற்ற எந்த அறிஞர்களும் சொல்வதை தன் வாழ்க்கையாகவே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருப்பதை பார்ப்பதே சுகம்.

அது வாழ்க்கையாக இருந்தாலும் சக மனிதர்களாக இருந்தாலும் யாரையும் விமரிசிக்காமல், எந்த வித புகாரும் இல்லாமல் வாழ்வது வரம்.

இன்னும் நிறைய இருந்தாலும் நான் நேசிக்கும் என் வாழ்வின் முதல் ஆணைப் பற்றிய பதிவை பதிய எனக்கு இன்னும் ஒரு பதிவு வேண்டும் என்பதனால் இதோடு முடிக்கிறேன்.

பதிவுகள்

வாழ்க்கையில் பல நேரங்களில் நம் அருகில் இருக்கும் தென்றலை கவனிக்காமல் குளிர் சாதனப் பெட்டியின் துணையோடு வாழப் பழகிக்கொள்கிறோம். அப்படி நான் கவனிக்காமல் விட்டுப் போன சிலரைப் பற்றிய பதிவு இது. அதிலும் சிலரை அவர்களது மரணத்தின் பின் தான் உணர்ந்துள்ளேன். அவர்களைப் பற்றிய குறிப்புகளோடு இனி நான் நுகரப்போகும் சுவாசத்தில் கலக்கக் காத்த்ருக்கும் அனைவருக்குமான பதிவு இது.