Thursday, August 27, 2009

பயணங்களின் தொடர்வில்



வெகு சமீபமாக ஒரு பயணத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக பயணித்துக்கொண்டு இருக்கிறேன். நல்ல நண்பர்கள், பயணங்கள் எனது தனிமையை விரட்டி தூர துரத்திகொண்டு இருந்தது. என்னையும் மீறி என் வாழ்க்கையில் திடீரென பூ பூத்த மாதிரியான மாற்றங்கள். இதில் சந்தோஷத்தை தாண்டிய ஒரு பதற்றம் உள்ளது.

எதற்கோ தொடங்கி எங்கோ போய்கொண்டு இருக்கிறது பதிவு. பயணத்தை பற்றி பேசும்போது உடனிருந்தவர்களில் தொடங்கி போவது முக்கியமாக உள்ளது. இரு நண்பர்களுடன் ஒரு பேருந்தில் காலை மெல்லிய காற்றில் தொடங்கியது அந்த பயணம். நான்கு மணி நேர பயண களைப்பு தெரியாமல் பயணம் முடிந்தது. பல தடவை தனியாக பயணித்த பாதையாயினும் மனதுக்கு அருகில் இருக்கும் நண்பர்களுடான பயணம் புதிதாகவும் பலவற்றை யோசிக்கவும் வைத்தது. சுற்றி இருந்த உலகம் மறந்த பயணமாக இருந்தது.

இந்த பதிவு பயண சம்பவங்களை கடந்த மனிதர்களை பற்றியதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

காலையில் கோவிலுக்குள் போகும்போது உடனிருந்த ஒரு நண்பர் வினோத் - மிக இயல்பாக பொருந்தி போனார். அதிகம் பேசவில்லை. அவரை பற்றி எந்த வித அனுமானத்துக்கும் வர இயலவில்லை. எதையும் அனுமானிக்கும் எண்ணமும் இல்லை. சாதரணமாக நடந்து போய்கொண்டிருந்தோம் கோவிலுக்குள். தனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்வதாகட்டும் தெரியாதவற்றை ஒத்துகொள்வதாகட்டும் ஒரு மனிதனை வேடிக்கை பார்ப்பதில் எனக்கு இருக்கும் ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்தினார் . எப்போதும் போல் எனது அறிவுரை படலத்தை தொடங்கினேன் ஆங்கில அறிவின் மேல் நமது மாணவர்களுக்கு இருக்கும் பயம் மற்றும் இருக்கவேண்டிய தேவை இல்லாததையும் பற்றி மிகபொறுமையாக கேட்டுகொண்டிருந்தார்.

அதன் பின் போனது பவா அவர்களின் வீட்டுக்கு. வெறும் வீடாக இல்லாமல் ஒரு இல்லமாக இருந்தது. ஒரு உயிர்ப்போடு இருந்த இல்லத்தை மிக நீண்ட நாட்களுக்கு பின் பார்த்தேன். சீராக அடுக்கப்பட்ட வீட்டின் மேல் எப்போதும் எனக்கு பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை. பவா அவர்களின் இல்லம் வாழ்க்கையாக இருந்தது. குழந்தைகளின் இருப்பை அவர்கள் இல்லாமல் இருந்தும் உணர்ந்தேன். பல வீடுகளில் குழந்தைகள் மீதான புறக்கணிப்பை பார்த்திருக்கிறேன். காலம் கடந்த ஞானத்தோடு பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரவணைப்பதை தள்ளி நின்று சிறு சிரிப்போடு பார்த்திருக்கிறேன். குழந்தைகள் வளரும்போது பல பெற்றோர்கள் வளர்வதே இல்லை. ஆனால் மிக ஆனந்தமாக ஒரு பெரிய குதூகலத்துடன் வளரும் பெற்றோரை வேடிக்கை பார்த்தேன்.

இன்னும் வளரும்

1 comment:

பா.ராஜாராம் said...

//அதன் பின் போனது பவா அவர்களின் வீட்டுக்கு. வெறும் வீடாக இல்லாமல் ஒரு இல்லமாக இருந்தது. ஒரு உயிர்ப்போடு இருந்த இல்லத்தை மிக நீண்ட நாட்களுக்கு பின் பார்த்தேன். சீராக அடுக்கப்பட்ட வீட்டின் மேல் எப்போதும் எனக்கு பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை. பவா அவர்களின் இல்லம் வாழ்க்கையாக இருந்தது. குழந்தைகளின் இருப்பை அவர்கள் இல்லாமல் இருந்தும் உணர்ந்தேன். பல வீடுகளில் குழந்தைகள் மீதான புறக்கணிப்பை பார்த்திருக்கிறேன். காலம் கடந்த ஞானத்தோடு பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரவணைப்பதை தள்ளி நின்று சிறு சிரிப்போடு பார்த்திருக்கிறேன். குழந்தைகள் வளரும்போது பல பெற்றோர்கள் வளர்வதே இல்லை. ஆனால் மிக ஆனந்தமாக ஒரு பெரிய குதூகலத்துடன் வளரும் பெற்றோரை வேடிக்கை பார்த்தேன்//

அருமை!