கொஞ்ச நாளைக்குப்பிறகு எழுதறேன். மொத மொதல்ல அமெரிக்கா வந்திருக்கறமே எங்கியாவது போலாமேன்னு இங்க இருக்கறவங்களைக் கேட்டு வாழ்க்கையில முதல் முறையா நிஜம்மா முதல் முறையா இங்க இருக்கற ஒரு டான்ஸ் கிளப்புக்கு போனேன். அட கூட ஆளுங்க இருந்தாங்கப்பு. அங்கே வேடிக்கை பாத்ததெல்லாம் ஒண்ணும் சொல்ற மாதிரி இல்லை. அத விடுங்க. (அதைத்தனியா கேக்க நினைக்கறவங்களுக்கு தனி மடல் படங்களுடன் அனுப்பபடும்). இது வேற கதை (சோகக்கதை) சொல்லும் நேரம்.
அந்த கிளப்புக்கு போனதே ராத்திரி 11 மணிக்கு. பாஸ்போர்ட் எல்லாம் கைல இருக்கான்னு செக் பண்ணி எடுத்துட்டு, கார்ல பேப்பர்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டு 3 பேர் கிளம்பினோம். கிளம்பும்போதே எங்க ஊர்ல இருக்கற குல தெய்வத்துக்கெல்லாம் வேண்டிட்டு வலது கால் எடுத்து வெச்சு கார்ல ஏறி உக்காந்தாச்சு.
ஒரு நியாய தர்மம் பாக்காம அந்த ஊர் குளிருது. நான் லேடி விசயகாந்த் மாதிரி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு முட்டி வரைக்கும் கோட் எல்லாம் போட்டுட்டு போறேன். இந்த ஊர்ல இருக்கறவங்க எல்லாம் பொண்ணுங்களே இல்லைங்க. நமீதா ரேஞ்சுக்கு முழுசா துணி போட்டு இருக்காங்க. இதெல்லாம் பாத்துட்டு ஒரு வழியா 1 மணி வாக்கில அங்க இருந்து கூட வந்த பசங்களை கிளப்பிட்டு அந்த ஏரியாவை விட்டு கிளம்பினோம். செம பசி. நான் வேற ரொம்ப்ப்ப்ப்ப நல்லவ மாதிரி ஒரு கிளாஸ் தண்ணி கூட குடிக்காம அந்த கிளப்ல இருந்து கிளம்பிட்டேன்
கூட இருந்த பசங்ககிட்ட "சாமியோவ் சாப்பிட ஏதாவது வாங்கித்தாங்க சாமியோவ்"னு கெஞ்சவே ஆரம்பிச்சிட்டேன். அது ஏதோ GPS ஆமே அத நம்பிட்டு கார் ஓட்டினவன் தேடறான் தேடறான் தேடிட்டே இருக்கான் ஒரு ரெஸ்டாரண்ட்டை ரெண்டு மணி நேரமா. சுத்தமா பொறுமை போயிடுச்சி எனக்கு. சரிடா வீட்டுக்காவது கொண்டு போய் விடு ஒரு கிளாஸ் பாலாவது குடிச்சிட்டு படுத்துடறேன் ஒரு வழியா அவனை கன்வின்ஸ் பண்ணி வீட்டுக்கு போக காரை திருப்பியாச்சு.
அப்பதாங்க சனி பகவான் அந்த வண்டியோட ஆக்ஸிலேட்டர்ல ஏறி உக்காந்தாரு. ஒரு சிக்னல்ல கொஞ்சமே கொஞ்சம் வேகமா அழுத்தினான் ஆக்ஸிலேட்டரை. கொஞ்ச நேரத்துலயே எங்களுக்கு பின்னாடி ஒரு பாடிகார்ட் மாதிரி ஒரு போலீஸ்கார் வந்துச்சி. பரவால்லியே நம்ம யாருன்றது இந்த ஊரில இருக்கறவங்களுக்கு கூட தெரியுதே. நமக்கு பாதுகாப்புக்கு உடனே ஆள் அனுப்பிட்டாங்களேன்னு நினைச்சிட்டிருந்தேன். இந்த பையன் காரை உடனே ஓரங்கட்டி நிறுத்துனான். சரி அவருக்கு என்னமோ அவசரம்னு நினச்சேன்.
காரை நிறுத்தினதுக்குப்பிறகு அவன் இறங்கவும் இல்லை. என்னடான்னு பாத்தா அந்த கார்ல இருந்து ஒரு போலீஸ்கார் வந்தார் ஸ்லோமோஷன்ல. எங்க போனாலும் இந்த போலீஸ்காரங்க ஸ்லோமோஷன்ல வரதை நிறுத்தவே மாட்டேன்றாங்க. எனக்கு மட்டும் ஏன் இப்படி.
வந்து அந்த பையன்கிட்ட நீ ஓவர் ஸ்பீட்ல வண்டி ஓட்டினே, லைசன்ஸ் எடுன்னாரு. அவன் ஏதோ வேகமா தேடிட்டு திருதிருன்னு முழிச்சான். என்னடான்னு கேட்டா லைசன்ஸ அந்த கிளப்லயே கிரெடிட் கார்டோட சேர்த்து குடுத்துட்டு வந்துட்டேன், நான் திரும்பி போய் எடுத்துட்டு வரவான்னு அந்த போலீஸ்காரங்கிட்டயே கேக்கறான். டேய் என்னடா சொல்றேன்னு அவன் பாக்கறான்.
சரி வண்டி பேப்பர்ஸ் எடுன்றாரு அந்த போலீஸ்கார மாமா. வண்டி ரெஜிஸ்டிரேஷன் பேப்பர் குடுத்தான். சரி இன்ஷ்யூரன்ஸ் எடுன்னா தடவ ஆரம்பிச்சுட்டான். ஒரு வழியா தேடி எடுத்து கொடுத்தா அது போன வருஷத்தோட இன்ஷ்யூரன்ஸ். இந்த வருஷத்தோடது எங்கேன்னு தெரியலை. டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்
சரி இன்னைக்கு கெரகம் தெளிவா புடுச்சி கிளப் டான்ஸ் ஆட ஆரம்பிச்சது புரிஞ்சது.
அந்த போலீஸ்காரர் ரெஜிஸ்டிரேஷன் பேப்பர்ஸ் எடுத்துட்டு அவன் காருக்கு போயிட்டான். சரி அந்த ஊர்ல எல்லாம் ஏதோ டிக்கெட் தருவாங்களாமே, ஒண்ணோ ரெண்டோ குடுத்து வீட்டுக்கு விட்டுடுவான்னு நினைச்சுட்டு உக்காந்திட்டிருந்தா போனவன் வரவே இல்லை. என்னடா நடக்குதுன்னு ஒண்ணும் புரியலை எப்ப புரிஞ்சுருக்கு இப்ப புதுசா புரிய.
ஒரு 30 நிமிஷம் கழிச்சி ஒரு வழியா வந்தான். வந்தவன் போட்டானே ஒரு வெடி குண்டு.
கொஞ்சம் கேப் விட்டு சொல்றேன்